Friday, December 26, 2008

எண்ணங்கள் - டாக்டர் M S உதய மூர்த்தி



எண்ணங்கள், நல்ல எண்ணங்களை எண்ணுங்கள் என்று சொல்லுகிற நல்ல புத்தகம்....! ஆனால் நீங்கள் நினைப்பது எல்லாம் நடக்கும் என்று டெலிபதி ரேஞ்சுக்கு போவது தான் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது...! உதாரணத்திற்கு, நீங்கள் உங்கள் வகுப்பிலோ அலுவலகத்திலோ உள்ள ஒரு பெண் உங்களை திரும்பி பார்ப்பாள் என்று எண்ணிக்கொண்டே இருந்தால் அது நிச்சயம் நடக்கும் என்பது போல் சொல்லுவது, எண்ணினால் போதும் அது நடந்துவிடும் என்ற மாய தோற்றத்தை கொடுக்கிறது. எண்ணங்களை செயல் படுத்த முயற்சிக்க வேண்டும் என்பதை சொல்லாமல் விட்டுவிட்டது என்கிற வருத்தம் என்னிடம் உண்டு. இப்படியான சில அபத்தங்களை தள்ளி விட்டு பார்த்தால் தமிழில் வந்த சிறந்த புத்தகங்களுள் ஒன்று...!


எனக்கு பிடித்த சுவாரசியமான பகுதிகளில் சில....


மனிதனின் எண்ணங்களே மனிதனை உருவாக்குகின்றன.
- புத்தர்


எண்ணங்களை
உள்ளே விடுங்கள். முடியும் என்ற எண்ணங்களை திரும்ப திரும்ப எண்ணுவதன் மூலம் மனதில் நம்பிக்கை பிறக்கிறது. நமது நம்பிக்கையைதிரும்ப திரும்ப சிந்திக்கும் பொது அது செயலாக பரிணமிக்கிறது. திரும்ப திரும்ப செய்யும் ஒரு செயல் பழக்கமாகிறது. பல பழக்கங்கள் மனிதனின் (character) குண நலன்களாகின்றன.
-
ரால்ப் வல்டோ டிரைன்
கொலை வாளினை எடடா
அந்த கொடியோர் செயல் அறவே...!
-
பாரதி தாசன்

இரண்டாம் உல போரின் சமயத்தில் காப்டன் ரிக்கன் பெக்கரும் அவருடைய எட்டு உதவியாளர்களும் பசுபிக் கடலில் சிறிய படகில் திசை தப்பி தத்தளித்தனர். சாப்பிட உணவு இல்லை. வழியோ தெரிய வில்லை. அவர்களிடம் இருந்தது சிறிய பைபிள் புத்தகம். ஆகவே அவர்கள் அதை திறந்து, "தண்ணீருக்கு எங்கே போவேன், சாப்பிட என்ன செய்வேன் என்று கவலைபடாதே" என்ற மாத்யூவின் வாசகங்களை படித்தனர். படித்த ஒரு கணத்தில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. எங்கிருந்தோ ஒரு கடல் புறா காப்டனின் தலை மீது அமர்ந்தது. காப்டன் அதை எளிதாக பிடித்து அனைவருக்கும் உணவாக வழங்கினார். மீண்டும் அரை மணியில் மழை பெய்தது. அவர்கள் குடிக்க தண்ணீர் கிடைத்தது. அவர்களுக்கு இப்போது பிழைத்துக் கொள்வோம் என்கிற நம்பிக்கை பிறந்தது. சில நாட்களில் அவர்கள் படகை பாதுகாப்பு விமானங்கள் கண்டுபிடித்தன. அவர்கள் காப்பாற்றப் பட்டார்கள்.
ஒரு வாளியில் இருந்த கறந்த பாலில் இரு தவளைகள் தவறி விழுந்தன. ஒரு தவளை எண்ணியது "நான் செத்தேன். எப்படி இதிலிருந்து பிழைக்க போகிறேன்" என்று புலம்பியது. உடனே அதன் கையும் காலும் சக்தி இழந்தன. சற்று நேரத்தில் அது இறந்தது.

இரண்டாவது
தவளையோ "இதிலிருந்து நான் எப்படியாவது தப்ப வேண்டும்" என்று எண்ணி கையையும் காலையும் உதைத்தது கொண்டதில் சற்று நேரத்தில் பால் நன்றாக கடையப் பட்ட நிலையை அடைந்தது. அதிலிருந்து வெண்ணை மிதக்க தொடங்கியது. சற்று நேரத்தில் அந்த தவளை வெண்ணையின் மீது சவுகர்யமாக உட்கார்ந்து கொண்டு ஒரு எம்பு எம்பி வெளியே குதித்தது.

ஒரு குழந்தை படம் வரைந்தது.
அதன் தந்தை "என்ன படம் வரைந்தாய் கண்ணே" என்று கேட்டார்.
"மாடு புல் தின்கிறது" என்றது குழந்தை.
"கண்ணே ! மாடு இருக்கிறது. புல் எங்கே" தந்தை கேட்டார்.
"இல்லை அப்பா! மாடு புல்லை தின்று விட்டது!" என்றது குழந்தை.

லண்டனில் ஒரு பணகார கிழவன் ஓர் ஏழை விவசாயிக்கு கடன் கொடுத்தான். விவசாயியால் பணத்தை திருப்பி கொடுக்க முடிய வில்லை. விவசாயிக்கு அழகு மிக்க பெண் இருந்தாள். அவளை தனக்கு திருமணம் செய்து கொடுத்தால் கடனை தள்ளி விடுவதாக கிழவன் சொன்னான். இதற்க்கு விவசாயியும் அவன் மகளும் உடன் பட வில்லை. பிறகு கிழவன் ஒரு யோசனை சொன்னான். "நமது முடிவை கடவுளிடம் விட்டு விடுவோம். இந்த காசுப் பையில் ஒரு வெள்ளை கூழாங்கல்லையும் கருப்பு கூழாங்கல்லையும் போடுகிறேன். உன் பெண் கையை விட்டு வெள்ளை கூழாங்கல்லையும் எடுத்தால் அவள் என்னை திருமணம் செய்ய வேண்டும். கருப்பு கூழாங்கல்லை எடுத்தால் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டாம். கடனை தள்ளி விடுகிறேன்." என்றான். வேறு வழி தோன்றாததால், விவசாயியும் அவன் மகளும் இதை ஒப்பு கொண்டனர். ஒரு நாள் மாலை கூழாங்கல்லையும் நிறைந்து கிடந்த தோட்ட பக்கமாக மூவரும் நடந்து கொண்டிருந்தனர். அபோது கிழவன் குனிந்து கூழாங்கற்களை எடுத்து பையில் போட்டான். அந்த பொல்லாத கிழவன் இரண்டு வெள்ளை கூழகாங்கல்லை எடுத்து போடுவதை அந்த பெண் கவனித்து விட்டாள். ஏதாவது ஒரு கல்லை எடுக்க சொன்ன போது, அவள் பையில் கையை விட்டாள். ஒரு கூழாங்கல்லை எடுத்தாள். உடனடியாக அதை நழுவ விட்டாள். கீழே கிடந்த மாற்ற கற்களுடன் ஒன்றாக அது மறைந்து விட்டது. "எனக்கு கை நடுங்குகிறது " என்றாள் அவள்.

"நீங்கள் பையில் பாக்கி இருப்பது என்ன நிற கல் என்று பார்த்தால் நான் எதை எடுத்தேன் என்று தெரிந்துவிடும்." என்றால். பையில் பாக்கியிருந்தது வெள்ளை நிற கல். ஆதலின் எடுத்தது கறுப்பாக தான் இருக்க வேண்டும். அவள் அந்த கிழவனை மணம் முடிப்பதிலிருந்து தப்பி விட்டாள். கடனும் தீர்ந்தது.
பிரச்னையை நான்கு கூறுகளாக பாகு படுத்தலாம்.
1. பிரச்சனை என்ன?
2. என்ன முடிவை விரும்புகிறோம்?
3. அந்த முடிவை அடையும் வழிகள் யாவை?
4. அவற்றில் சிறந்த வழி எது?
தன்னம்பிக்கையை வளர்க்க,

1. முகத்தில் புன்னகையை தவழ விடுங்கள்.
2. கொஞ்சம் கம்பீரமாக பாருங்கள்.
3.தலை நிமிர்ந்து நடங்கள்.
4.நடக்கும் வேகத்தை சிறிது அதிகப் படுத்தி பாருங்கள்.
5.பிறருடன் பேசும் போது குரலை உள்ளே விழுங்காமல் தெளிவாக நிதானமாக பேசி பாருங்கள்.
6. கூடங்களில் முன் வரிசைகளில் அமர்ந்து பழகுங்கள்.
7.பிறருடன் பேசும் போது கண்களை கண்ட இடத்திலும் பரவ விடாமல் பேசுபவரின் கண்களை நோக்கி செலுத்துங்கள்.


"தமிழ் நாட்டில் எந்த ஊரில் எந்த ஆறு ஓடுகிறது. எந்த ஊருக்கு கட்டை வண்டியில் போக வேண்டும் என்பதெல்லாம் எனக்கு தெரியும். இதெல்லாம் பூகோள படமில்லை என்றால் நான் படிக்காதவன் தான்"
- கர்ம வீரர் காமராஜர்.


மேதை தனம் என்பதெல்லாம் ஒரு சதம் உத்வேகமும் 99 சதம் கடின உழைப்பும் தான்.
வெற்றிக்கு உழைப்பு தான் குறுக்கு வழி.
மேலே செல்லுங்கள்.
விடா முயற்சிக்கு ஈடாக இவ்வுலகில் எதுவும் இல்லை. திறமை ஈடாகாது. திறமை இருந்தும் தோல்வி பெறுவோர் சகஜம்.
மேதை தனம் ஈடாகாது.
பலன் காணா மேதைகள் என்பது பழ மொழி.
கல்வி மட்டும் ஈடாகாது.
இந்த உலகம் படித்தும் பாதை தவறியவர்களால் நிறைந்திருக்கிறது.
விடா முயற்சியும் உறுதியும் மட்டும் சர்வ வல்லமை படித்தவை.
- கால்வின் கூலிக் ( அமெர்க்க ஜனாதிபதி)


பயமெனும் பேய்தனை அடித்தோம்
பொய்மை பாம்பை பிளந்துயிரைக் குடித்தோம்.


சிறிய விசயங்களை பற்றி என் கவலைப்பட வேண்டும்? அதனால் ஒன்றும் தலை போய் விடாது. பெரிய விசயங்களை பற்றி என் கவலைப் பட வேண்டும்? என்ன தான் கவலை பட்டாலும் அதன் விளைவுகள் மாறப் போவதில்லை. ஆகவே, எப்படி பார்த்தாலும் சிறிய விஷயங்களுக்கோ பெரிய விஷயங்களுக்கோ கவலை படுவதில் அர்த்தமே இல்லை.

அமெரிக்க டெலிவிசன் செய்தி ஆசிரியர்களுள், எரிக் சவரைட் என்பவர் புகழ் பெற்றவர். அவர் எழுதுகிறார். "நாங்கள் பர்மா காட்டிற்குள் சிக்கி கொண்டோம். பலர் இறந்து போனார்கள். எங்கள் கதி என்ன என்று பிறர் அறிய வழி ஏதும் இல்லை. என் காலில் காயங்கள். காலை எடுத்து வைக்க முடியாத நிலை. சுமார் 140 மைல்கள் நடந்தால், நகர் எல்லையில் உள்ள எங்கள் முகாமுக்கு போய் சேரலாம். எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு மைல் நடப்போம் ஏதாவது ஊர் வரும் என்று எண்ணியவாறு நடந்தேன். ஒவ்வொரு மைலாக கடந்தேன். சில நாட்களுக்கு பிறகு ஒரு கிராமம் தெரிந்தது."


இந்த இணைப்பை பயன்படுத்தி எண்ணங்கள் புத்தகத்தின் ஒலி வடிவை நீங்கள் கேட்கலாம்....

6 comments:

வாசகன் said...

உதயமூர்த்தி எப்போலருந்து உதயகுமார் ஆனாரு?????

நவநீதன் said...

சாரி... இப்ப திருத்திட்டேன்....
நாங்கல்லாம் பரிச்சையில பிட்ட பார்த்து எழுதும்போதே தப்பா எழுதுனவங்க....
இதெல்லாம் நமக்கு ஜுஜுபி...
ஹி...ஹி...

நவநீதன் said...

தவறை திருத்தியதற்கு நன்றி... வாசகரே.....!

Senthil Kumar said...

'எண்ணங்கள்' புத்தகத்தின் சுவாரஸ்யமான விஷயங்கள் ரசிக்கும் படி இருந்தது. புத்தகம் படிக்கும் ஆர்வம் எனக்கு இல்லை என்றாலும் இது போன்ற சுவாரஸ்யமான பகுதிகளை படிக்கும் போது சந்தோசமாக உள்ளது. இதை வெளியிட்ட உமக்கு எனது பாராட்டுக்கள்.

நவநீதன் said...

நன்றி செந்தில்...!

Unknown said...

one of best book i have read