
எங்க கல்லூரியில ஷேக் தாவூத் அப்படீன்னு ஒரு வாத்தியார் (லெக்சரர வேற எப்படிங்க கூப்பிடறது...) இருந்தார். அது தான் அவர் எங்களுக்கு எடுத்த முதல் வகுப்பு... அவரு சிரிச்சுகிட்டே தான் class எடுத்தாரு.... முன்னாடி இருந்த பொண்ணுங்களும் சிரிச்சுகிட்டே இருந்தாங்க... சரி போனா போகுதுன்னு நானும் சிரிச்சு வச்சேன்...
பக்கத்தில் இருந்த நண்பன் (கமலநாதன்னு நினைக்கிறேன்...) சிரிக்காமல் கிசுகிசுத்தான் "வேண்டாம் சிரிக்காத... அப்புறம் ஆப்புத்தான் ".
"ஏன்டா...?" .
இப்போ ஷேக் சார் நம்மள, பாத்து சொன்னாரு "தம்பி... பாடம் நடத்தும் போது பேசாத... ".
கொஞ்ச நேரம் கழிச்சு, என்கிட்டே ஒரு கேள்வி கேட்டார் (சிரிச்சுகிட்டே தான்). ரொம்ப ஈஸியான கேள்விதான். நானும் எந்திருச்சு நின்னு சிரிச்சுகிட்டே பதில் சொன்னேன்.
"என்ன தம்பி சொன்னீங்க... ? மறுபடியம் சொல்லுங்க..." என்றார். எனக்கு ஒரே டவுட்டகி போச்சு. நாம கரெக்டா தான் சொன்னமா இல்லையான்னு. அந்த காலத்தில நான் கொஞ்சம் shy டைப் வேற (இப்பவும் தான்...ஹி.. ஹி...). உடனே நான் தெரியலன்னு சொல்லிட்டேன். எனக்கு பக்கத்தில இருக்குறவன பாத்து, "தம்பி... நீ சொல்லு தம்பி " என்றார். அவனும் நான் சொன்னதையே அப்படியே சொன்னான்.
"நீயெல்லாம் நாளைக்கு இஞ்சினியராகி எப்படி ஒரு கம்பனிக்கு வேலைக்கு போகப்போற?? ஏன் தம்பி... ". அப்படீன்னு ஆரம்பிச்சு ஒரு பத்து நிமிசத்துக்கு திட்டினார். (நான் இஞ்சினியராகி நல்ல வேலையில இருக்குறது வேற விஷயம்.) நான் ரொம்ப பாவமா, நின்னு கிட்டு இருந்தேன். இப்போது சிரிப்பு அவர் முகத்திலும் இல்லை. பொண்ணுங்க முகத்திலும் இல்லை. என் முகத்திலும் இல்லை. எனக்கு என்ன தப்பு செய்தொம்னே புரியல. ஒரு shy-யான மாணவனை சமாளிக்க தெரியாமல் ஒரு ஆசிரியர் இப்படியா திட்டுவது என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது.
அவர் பிரியடு முடிஞ்சவுடனே, "நான் தான் அப்பவே சொன்னேன்ல. அவர் வர்றதுக்கு முன்னாடியே சீனியர் கிட்ட கேட்டு அவர பத்தி தெரிஞ்சுகிட்டேன். அவருக்கு பொண்ணுங்க சிரிச்சா தான் புடிக்கும் பசங்க சிரிச்சா புடிக்காது " அப்படீங்கற உண்மைய சொன்னான் கமலநாதன். இதுல இப்படி ஒரு உள்குத்து இருக்கும்ன்னு தெரியாம போச்சேன்னு நானும் பேசாம இருந்துட்டேன்.
அதுக்கு அப்புறம் அவர் பிரியடுல சிரிக்காம இருக்க கத்துக்கிட்டேன். பொண்ணுங்க மட்டும் அவர் அடிக்குற மொக்க ஜோக்குக்கு எல்லாம் சிரிச்சுகிட்டு இருப்பாங்க. பசங்க எல்லாரும் எப்பிடிஜோக் அடிச்சாலும் சிரிக்க மாட்டங்க. இப்படி தான் போயிக்கிட்டு இருந்தது. ஆனா பொண்ணுங்கள பார்த்து, மொக்க ஜோக்குக்கு சிரிக்குராய்ங்களேன்னு எரிச்சலா வரும்.
செமஸ்டர் ரிசல்ட் வந்தது. அவர் பாடத்தில, சிரிக்குற பொண்ணுங்களுக்கு மட்டும் மார்க்க அள்ளி வீசியிருந்தார். வழக்கம் போல சிரிக்காத பையன்களுக்கு கொஞ்சம் கம்மி தான்.
அவர் வழக்கமா பசங்கள தம்பின்னு தான் கூபிடுவார். பொண்ணுங்கள பேர் சொல்லி தான் கூபிடுவார். எங்க சீனியர் ஒருத்தர் (மரியாதை??) "சார் எங்கள மட்டுன் தம்பின்னு கூப்பிடுரீங்க, பொண்ணுங்கள மட்டுன் ஏன் சார் தங்கச்சின்னு கூப்பிட மட்டேங்கிறேங்க...?? " ன்னு கேட்டுட்டார். சாருக்கு தர்ம சங்கடமா போச்சு. "தங்கச்சி வேண்டாம் அது நாள்ல இல்ல... வேணும்னா சிஸ்டர் ன்னு கூப்பிட்டுக்கலாம்..." என்று சொல்லிவிட்டு அன்று ஒரு நாள் மட்டும் ரொம்ப கஷ்டப் பட்டு சிஸ்டர்னு கூப்பிட்டாரம்.... அடுத்த நாளில் இருந்து வழக்கம் போல, பசங்க தம்பிகளா ஆயிட்டாங்க... பொண்ணுங்க பொண்ணுங்களாவே இருந்தாங்க...
அவர் கடேசி செமஸ்டர்ல, அதிகமா பாடம் நடத்த மாட்டாரு. சும்மா மொக்கையாத்தான் போடுவாரு. அதாவது எப்படின்னா "அப்துல் கலாம் ஜனாதிபதியா இருக்கலாமா? வேண்டாமா ?" ங்கிறது மாதிரி ஜெனரலான கேள்விக்கு எல்லோரையும் எந்திரிச்சு பதில் சொல்ல வைப்பாரு.
அன்னிக்கு என்ன கேள்வின்னா "ஒரு நல்ல ஆசிரியர் எப்படி இருக்கணும்?"ங்கிற கேள்வி. எல்லோரும் "ஒரு பிரண்டு மாதிரி இருக்கணும் சார்" அப்படின்னு சொல்லீட்டு உக்காந்துட்டாங்க. நான் என் பதில பிரிபேர் பண்ணிக்கிட்டேன் . என் முறை வரும் போது, எந்திரிச்சு டான்னு இந்த பதில சொன்னேன்.
"பொண்ணுங்க கிட்ட மட்டும் சிரிச்சு பேசிக்கிட்டு பசங்ககிட்ட சிரிக்காம பேசிக்கிட்டு அப்படி எல்லாம் இருக்க கூடாது சார். பொண்ணுகளுக்கு எல்லாம் லேப்ல அதிகமா மார்க் போட்டு பசங்களுக்கு மார்க் போடாம அப்படியெல்லாம் இருக்க கூடாது சார் ".
இந்த ரெண்டு பாயின்ட்ட சொல்லும் போது, எனக்கு இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு. பொண்ணுங்க எல்லாம் திரும்பி ஆச்சர்யமா பார்த்தாங்க. பசங்க எல்லாம் உள்ளுக்குள்ள ஆச்சர்யப்பட்டாலும் முகத்துல எந்த உணர்ச்சியும் காட்டல (வழக்கம் போல). அவருக்கும் உள்ளுக்குள்ள அதிர்ச்சி இருந்திருக்கணும். ஆனா வெளிய காட்டிகாம, ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு அடுத்த பையன கேட்க ஆரம்பிச்சிட்டார்.
எல்லோரும் பதில் சொல்லி முடிச்சதும், "நாம பொண்ணுங்க கிட்ட மட்டும் சிரிச்சு பேசிக்கிட்டு அப்படியா இருக்கோம்? இல்லைல... எல்லார்கிட்டையும் தான சிரிச்சு பேசுறோம். லேப்ல எல்லாம் நாம மார்க் போடுறதில்ல தம்பி நீங்க எடுக்குறது. " இதை தன்னிலை விளக்குமாத்தாக சாரி... விளக்கமாக சொன்னார். ஆனால் அது அப்பட்டமான பொய். லேபில் உள்ள நூறு மார்க்கும் அவர் போடுவது தான். யாருமே அவரை கேள்வி கேட்க முடியாது.
அன்னைக்கு அவர் போனதும் "ஏய்..! என்னடா இப்படி சொல்லிட்ட...உனக்கு தைரியம் அதிகம்டா..." ன்னு எல்லா பசங்களும் என் இடத்துக்கு வந்து சொல்லும் போது நான் ஒரு ஹீரோவாகவே ஆகிவிட்டதாக உணர்ந்தேன்.
பி.கு:
இது யாரையும் புண்படுத்துவதற்காக எழுதப் பட்டதல்ல. என் வாழ்வில் நடந்த சுவாரசியமான சம்பவத்தை பதிவு செய்திருக்கிறேன். இதை சம்பந்த பட்டவர்கள் படித்து, அவர்கள் மனம் ஒரு வேளை புண்பட்டால், அது வருத்தத்திற்குரியது.