"டேய் டகுலா, எனக்கு பொண்ணு பாத்திருக்காங்கடா... "
"ஏன்டா, பொண்ணு வீட்ல உன்ன பத்தி சரியா விசாரிக்கலையா என்ன? "
"ஏன்டா அப்டி சொல்ற ?"
"விசாரிச்சா உனக்கெல்லாம் எவண்டா பொண்ணு குடுப்பான்?"
"டேய்..?!! " - கொஞ்சம் கடுப்பாகி விட்டான் பாஸ்கரன்.
இப்பவும் நான் விடலியே...
"எப்படின்னாலும் உன்ன பார்த்துட்டு பொண்ணு ஓடப்போகுது. சரி... பொண்ணு யாரு? என்ன மேட்டரு...?"
"தெக்கு தெரு, பிள்ளையார் கோயில் சந்துல தான் பொண்ணு வீடு... அவங்க அப்பா மளிகை கடை வச்சுருக்காருடா.... "
"அடுத்த மாசத்துல இருந்து உங்க வீட்டுக்கு மளிகை செலவு மிச்சம்ன்னு சொல்லு ..."
"விளையாடாதடா...நாளைக்கு சாயுங்காலம் ஏழு மணிக்கு நம்ம சிவன் கோயில்ல பொண்ணு பாக்க போறோம்... நீயும் வர்ற... "
ஒ... இது தானா மேட்டரு... எங்க பிரண்ட்ஸ் குருப்லையே, நான் ஒருத்தன் தான் கொஞ்சம் கருப்பு. அதனால, பொண்ணு பாக்க தொணைக்கு ஆள் பிடிக்குது நாயி...(அய்யய்யோ... நாய் கோவிச்சுகிச்சுன்னா என்ன பண்றது? ).
எப்டீன்னாலும் என்னைய விட்டா இவனுக்கு வேற ஆள் கிடையாது. இது தான் சாக்குன்னு கொஞ்சம் பிகு பண்ணுவோம்.
"நாளைக்கு எனக்கு வேல ஜாஸ்திடா... ஆடிட்டிங் வேற இருக்கு..."
"எப்படியாவது வந்துர்ரா மச்சி... நான் உங்க ஆபிச்லையே கூட வந்து பிக் அப் பண்ணிக்கிர்றேன்..."
பாருங்க மகா ஜனங்களே...! எப்படி கால்ல விழுகுரான்னு.
"சரி... பொண்ணு பாக்குறப்ப நீ பாட்டுக்கு சைட் அடிக்குரப்ப பாக்குற மாதிரி, நாக்க தொங்க போட்டுக்கிட்டு பார்த்து வைக்காத. பொண்ணு மெரண்டுர போகுது. கொஞ்சம் டீசெண்டா பாரு. சரியா...? எங்க ஒரு ரொமான்ட்டிக் லுக் விடு... "
பாஸ்கரன் என்னை பார்த்து முறைத்தான்.
"இது தான் உங்க ஊர்ல ரொமான்ட்டிக் லுக்காடா... எப்படியோ ஒரு பொண்ணு தப்பிக்க போகுது... சரி நான் வர்றேன்..."
மறுநாள் மாலை ஏழு மணி... சிவன் கோவில்...
பாஸ்கர், நானு, அவனோட அப்பா அம்மா என நாலு பேர் மட்டும் மாப்பிள்ளை சைடுல வந்திருந்தோம். பொண்ணு வீட்ல இருந்து ஒரு பெரிய ஊர்வலம் மாதிரி வந்திருந்தாங்க... பொண்ணு, பொண்ணோட அப்பா அம்மா தவிர, ரெண்டு கெழடு கட்டைங்க, மூன்று நான்கு சம வயது பெண்கள், ரெண்டு மூணு சிறு குழந்தைகள்.... எல்லோரும் வந்திருந்தாங்க...
புரோக்கர் வந்து பொண்ணையும், மாப்பிள்ளையையும் அறிமுகப்படுத்தினார்.
பொண்ணு பக்கத்தில நின்னா நானே சிவப்பா இருந்தேன். டேய் இந்த பொண்ண பாக்குரதுக்காடா, யாரு கருப்பா இருக்கான்னு பாத்து என்ன கூட்டி வந்த?
அது சரி! இந்த மொன்ன நாயிக்கு இந்த பொண்ண விட்டா, வேற எந்த பொண்ணு கிடைக்கும்?
ஒரு லட்சம் ரொக்கம் தர்றேன்னு சொன்ன உடனே ஆன்னு வாயப் பிளந்துட்டான். இருந்தாலும், பொண்ணு கூட தனியா ரெண்டு நிமிஷம் பேசனும்னு தள்ளிக்கிட்டு போயிட்டான்.
அப்ப தான் அவளை பார்த்தேன். சிகப்பு கலர் சுடிதார்ல கண்ணாடி போட்ட ஒரு தேவதை மாதிரி இருந்தாள். சிறு குழந்தைகளோடு விளையாடிக்கொண்டும், கையில் ஒரு கைக் குழந்தையை வைத்து, அதை கொஞ்சிக் கொண்டும் இருந்தாள். நான் அவளை பார்த்தேன். சில சமயம் பெருமிதமாய் புன்னகைத்தாள். சில சமயம் நான் பார்க்கிறேனா என்று பார்த்துக் கொண்டாள். அரை மணி நேரம் இரண்டே வினாடிகளில் கடந்து விட்டதாய் உணர்ந்தேன். எல்லோரும் கிளம்புகையில், அவளை பார்த்து "போயிட்டு வர்றேன்" என்றேன். புன்னகையுடன் தலையாட்டினாள்.
* * * * * * * * * *
இரவு 9 மணி...!"பாஸ்கர், இன்னிக்கு பொண்ணு பாத்தப்ப, எனக்கு ஒரு பிகரு சிக்கிருச்சுடா... நீ தாண்டா இதுக்கு ஹெல்ப் பண்ணனும்..."
"யாருடா அது? " - ரொம்ப ஆச்சர்யம் கலந்த உற்சாகத்தோட கேட்டான். நமக்கு பிகர் கிடைக்குறது இவனுக்கு ஆச்சர்யமா இருக்கு. எல்லாம் பொறாமை.
"கண்ணாடி போட்ருந்தால்ல... "
"அவங்க வீட்ல அவங்க அப்பா உள்பட, எல்லோருமே கண்ணாடி போட்ருந்தாங்கடா... வேற ஏதாவது அடையாளம் சொல்லு..."
"கொஞ்சம் குட்டையா...."
"டேய் அவங்க வீட்ல எல்லாருமே குட்ட தாண்டா..."
"சிகப்பு கலர் சுடிதார் போட்டு, சின்ன குழந்தைங்க கூட விளையாடிக்கிட்டு இருந்தாள்ல..." என்று சொன்ன உடனே கொஞ்ச நேரத்துக்கு என்னை முறைத்து பார்த்தன்.
"பொண்ணோட அம்மா பக்கத்துல நின்னுகிட்டு இருந்தாங்களே அவங்களா..." என்றான். அவங்களா என்ற மரியாதை என்னை என்னவோ பண்ணியது. அதுவும் இல்லாமல் அவனிடம் முதலில் இருந்த உற்ச்சாகம் காணாமல் போயிருந்தது.
"அமாண்டா...! " என்றேன்.
"அவங்க பொண்ணோட அக்காடா...அவங்களுக்கு கல்யாணமாகி ரெண்டு கொழந்தை இருக்கு... கூட விளையாடிக்கிட்டு இருந்ததே அது அவங்க குழந்தை தாண்டா... " என்று அவன் சொல்லி முடிக்கவும், "அப்படியா..." என்று அசடு வழிந்து கொண்டே வீட்டுக்கு வந்தேன் என்று சொல்லவும் வேண்டுமா...?!!
* * * * * * * * * *
நேரு உள் விளையாட்டு அரங்கம்.குட்டையான, திருமணமான பெண்கள் சுடிதார் அணியக்கூடாது என்ற சட்டத்தை முதலமைச்சர் அமல் படுத்தினார். நான் உற்சாகத்தோடு கைத்தட்டினேன். என் பக்கத்தில் இருந்தவன் ரொம்ப வேகமாக கை தட்டினான். என்னை விட அதிகம் பாதிக்கப் பட்டிருப்பான் போலிருக்கிறது. திடீரென்று மழை வந்தது. "இன்னிக்கு ஆபிசுக்கு லீவா...? எட்டு மணியாகுது இன்னும் தூங்குற... " என்று அம்மா கேட்டுக் கொண்டிருந்தார்கள், கையில் தண்ணீர் சொம்போடு.* * * * * * * * * *